காந்தி சிலைக்கு சட்டை இல்லாமல் வந்து மாலை அணிவித்த விவசாயிகள்
மயிலாடுதுறையில் விவசாயிகள் மேல் சட்டை இல்லாமல் வந்து காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர்.
1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி மதுரை வந்த தேச தந்தை மகாத்மா காந்தி விவசாயிகள் மேல் சட்டை இல்லாமல் அரை ஆடை அணிந்து இருப்பதை பார்த்து, இந்தியாவின் கடைசி விவசாயி எப்போது முழுமையாக ஆடை அணிகிறானோ அதுவரை தானும் முழு ஆடை அணியப் போவதில்லை என்று அரை ஆடைக்கு மாறினார்.
பின்னர் அதுவே அவரது அடையாளமாக மாறிப் போனது. இந்த நிகழ்வு நடந்து 100 ஆண்டுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் மயிலாடுதுறையில் 100 ஆண்டுகள் கடந்தும் தங்கள் நிலைமை இன்னமும் மாறவில்லை என விவசாயிகள் மயிலாடுதுறையில் உள்ள மகாத்மா காந்தியின் முழு உருவ சிலைக்கு சட்டையில்லாமல் அரை ஆடையுடன் வந்து மாலை அணிவித்து முறையிட்டனர்.
இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் பங்கேற்று காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து விவசாயிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu