ஆன்லைன் குளறுபடியால் நெல் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு

ஆன்லைன் குளறுபடியால் நெல் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
X

விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆன்லைன் குளறுபடியால் நெல் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் துவங்கப்பட்டு நெல் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்வதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலரிடம் ஏக்கருக்கு 60 சிப்பம் சிட்டா அடங்கல் பெற்று ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். ஆனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் குளறுபடியால் விவசாயிகளின் ஊர் பெயர் விபரங்கள் இல்லாததால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறை அருகே இளந்தோப்பு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆன்லைன் குளறுபடியால் நெல் கொள்முதல் செய்யப்படாததை கண்டித்து விவசாயிகள் பட்டவர்த்தி கடை வீதியில் சாலையில் நெல் மூட்டைகளைப் போட்டு சாலையை சுற்றி கயிறு கட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

60 சிப்பம் பதிவு செய்யப்பட்டால் 40 சிப்பம் மட்டுமே ஆன்லைனில் கணக்கில் காண்பிப்பதாகவும், பல்வேறு கிராமங்களின் பெயர்கள் ஆன்லைனில் இல்லை என்றும் இதனால் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மூட்டைகளுடன் தவித்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உடனடியாக ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்து நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் வைதீஸ்வரன் கோவில் மணல்மேடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!