மயிலாடுதுறை அருகே நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்
மயிலாடுதுறை அருகே நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி செய்த பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய மயிலாடுதுறை மாவட்டத்தில் 165 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் குத்தாலம் அருகே திருவேள்விக்குடி கிராமத்தில் 15 வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்த கொள்முதல் நிலையம் கடலங்குடி கிராமத்தில் மாற்றி அமைக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பழைய இடத்திலேயே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று மயிலாடுதுறையிலிருந்து கல்லணை செல்லும் சாலையில் திருவேள்விக்குடி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லினை சாலையில் கொட்டி மறியல் செய்த விவசாயிகள் பழைய இடத்திலேயே கொள்முதல் நிலையத்தை அமைத்து தரக்கோரி முழக்கமிட்டனர்.
தகவலறிந்து வந்த குத்தாலம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி பழைய இடத்திலேயே நேரடி நெல் கொள்முதல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை விவசாயிகள் தற்காலிகமாக கைவிட்டனர். மேலும் அரசியல்வாதிகள் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu