மயிலாடுதுறை அருகே போதிய விளைச்சல் இல்லாததால் விவசாயி தற்கொலை
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே முடிகண்டநல்லூர் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து ஒருஜோடி மாடுகளை வளர்த்து பராமரித்து வந்துள்ளார். இவரது மகன் அருண்குமார்; படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார்.
இந்த நிலையில் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக செய்துவந்துள்ள ஜெயராமன் கடந்த குறுவை மற்றும் சம்பா பருவத்தில் தனது 2 ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். ஆனால், கனமழையின் காரணமாக அவர் பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக கூறப்படுகின்றது. தொடர்ந்து செலவைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த ஜெயராமன் ஒருகட்டத்தில் உறவினர்கள் மற்றும் வீட்டில் இருந்த நகைகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் (ஐஓபி) தனது மகன் மற்றும் மனைவி பெயரில் வைத்து ரூ.5 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார்.
பின்னர் அந்தப் பணத்தை வைத்து விவசாயம் மேற்கொண்ட ஜெயராமனுக்கு எதிர்பார்த்த அளவுக்கு சம்பா சாகுபடி கைகொடுக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகினார். மேலும் வங்கியிலிருந்து வாங்கிய கடனை செலுத்த நெருக்கடி அளித்ததால் மனமுடைந்த ஜெயராமன் கடந்த சனிக்கிழமை தனது வயலில் குருணை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக உறவினர் அளித்த புகாரின்பேரில் விவசாயி கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டதாக மணல்மேடு போலீஸார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். இறந்த விவசாயி ஜெயராமன் வீட்டிற்கு விவசாயசங்கத்தை சேர்ந்த பலர் நேரடியாக சென்று ஆறுதல் தெரிவித்தனர். மேலும் வங்கியில் பெற்ற கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்து இறந்த விவசாயி மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விவசாய சங்க நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu