நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பெண் தராமல் ஏமாற்றியதாக போலீசில் புகார்
மயிலாடுதுறை அருகே நிச்சயித்த பெண்ணை தர மறுத்த பெண் வீட்டார் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கிளியனூரைச் சேர்ந்தவர் தங்கையன் மகன் சின்னதம்பி(28). வெளிநாட்டில் வேலைபார்த்துவிட்டு இந்த ஆண்டு சொந்த ஊருக்கு வந்த சின்னதம்பிக்கு திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்து, மயிலாடுதுறை வில்லியநல்லூர் மேட்டுத்தெருவில் வசிக்கும் முருகன் என்பவரது மகள் அபிநயா(18) என்ற பெண்ணை கடந்த ஜூன் 28-ஆம் தேதி ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.
இதையடுத்து, தனது வருங்கால மனைவிக்கு 2 பவுன் தங்க செயின், ரூ.13ஆயிரம் மதிப்புள்ள செல்போன், பெண்ணின் தந்தைக்கு ஸ்பிளண்டர் பிளஸ் பைக் ஆகியவற்றை தனது சொந்த செலவில் சின்னதம்பி வாங்கித்தந்துள்ளார். அதன்பின்னர் சின்னதம்பி கடந்த 15-ஆம் தேதி அபிநயாவின் பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அபிநயாவைக் காணவில்லை என்றும் தேடி வருவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதன்பின் அபிநயாவிடம் பேசியபோது, நான் வரமாட்டேன், நீ வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொள், இது என் பெற்றோருக்கும் தெரியும் என்று கூறி துண்டித்துள்ளார்.
இதையடுத்து, ஊர் முக்கியஸ்தர்களிடம் சொல்லி கேட்டபோது, நிச்சயதார்த்தத்துக்கு செலவு செய்த ரூ.50ஆயிரம், சின்னதம்பி வாங்கித்தந்த செயின், செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை திருப்பித் தந்துவிடுவதாக பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதன் பின்னும் அப்பொருட்களையும், பணத்தையும் தராமல் மாப்பிள்ளை வீட்டாரை பெண் வீட்டார் அலைக்கழித்துள்ளனர். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மணமகனின் குடும்பத்தினர் தாங்கள் செலவு செய்தவற்றை திரும்ப பெற்றுத்தருமாறு மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu