தருமபுர ஆதீன குருபூஜை பெருவிழாவை முன்னிட்டு ஆதீனகர்த்தர் பட்டணப் பிரவேசம்
பட்டண பிரவேச நிகழ்ச்சியில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி சென்றனர்.
மயிலாடுதுறையில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில் ஆண்டுதோறும் குருபூஜைவிழா, பட்டணபிரவேசவிழா வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 11ம் திருநாள் திருவிழாவன்று ஆதினத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தர் குருபூஜை விழா பட்டணபிரவேசம் நிகழ்ச்சியும் பாரம்பரியமாக நடப்பது வழக்கம்.
இவ்விழாவில் குருமகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கிசென்று ஆதீன திருடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.
மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்ததையடுத்து கடந்த மாதம் பல்லக்குதூக்கும் (பட்டணபிரவேசம்) நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடைவிதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து அமைப்பினர், பக்தர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மதவழிபாட்டு முறைகளுக்கு அரசு தடைவிதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.
பல்வேறு ஆதீனங்கள் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில் பல்லக்குதூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிகொள்வதாக கடந்த 7 ம் தேதி கோட்டாட்சியர் பாலாஜி ஆணைபிறப்பித்தார். பின்னர் இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் அனுமதி வழங்கினார்.
இதனால் பட்டணபிரவேசம் பற்றிய பேச்சுக்கள் பிரபலமானதால் கடந்த காலங்களை விட இந்த ஆண்டு பட்டணபிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். பட்டணபிரவேச நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு உள்ளதால் டி.ஐ.ஜி. தலைமையில் 2 எஸ்.பி.க்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு தடைகளை கடந்து பட்டணபிரவேசவிழா கோலாகலமாக தொடங்கியது. இதில் தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபாரணங்கள் அணிந்துகொண்டு திருக்கூட்ட அடியவர்கள் புடைசுழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். தொடர்ந்து, பல்லக்கினை நான்கு கோடி நாட்டாமைகள் தலைமையில் 70 பேர் தோளில் சுமந்து சென்றனர்.
அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், ஒட்டகம் உள்ளிட்ட பரிவாரங்களுடன், நாதஸ்வரமேள தாளங்கள்,சென்டைமேளம் முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், புளியாட்டாம், உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுடன் வாணவேடிக்கை முழங்க ஆராவாரத்துடன் சிவனடியார்கள், பக்கதர்கள் புடைசூழ தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் அமர்ந்து வீதியுலா சென்றார்.
ஆதீனமடத்தை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் பூரணகும்ப மரியாதையுடன் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளித்து தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினர். பக்தர்களுக்கு குருமகா சன்னிதானம் ஆசி வழங்கினார்.
புகழ்பெற்ற தருமபுர ஆதீன பட்டணப்பிரவேச பெருவிழாவில் சைவ ஆதீனங்களான சூரியனார் கோயில் ஆதீனம், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம்,செங்கோல் ஆதீனம், உள்ளிட்ட பல்வேறு ஆதீனங்கள் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த நிர்வாகி ஹெச். ராஜா பா.ஜ.க. மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம், இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். வீதியுலா முடிவடைந்து ஆதீன குருபூஜை மடத்தில் வழிபாடு மேற்கொண்டு ஞானகொலுக்காட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசிவழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu