வைத்தீஸ்வரன்கோவில் கும்பாபிஷேகம். பக்தர்களுக்கு அனுமதி இல்லை
என்.ஸ்ரீநாதா(மாவட்ட காவல் கண்காணிப்பாளர்), இரா.லலிதா (மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்),
வைத்தீஸ்வரன்கோவில் கும்பாபிஷேகத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு: போக்குவரத்துக்கு தடை: வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டுகளிக்க மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தல்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பிரசித்திபெற்ற செவ்வாய் ஸ்தலமான வைத்தீஸ்வரன்கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 29-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாதா ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கூறியதாவது: கும்பாபிஷேக விழா நீதிமன்ற உத்தரவுபடியும் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதல்படியும் நடைபெற உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி வைத்தீஸ்வரன்கோயில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் கும்பாபிஷேகத்தை பார்க்கும் வகையில் யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் 380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 130 பேர் மருத்துவமனையிலும் 250 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு போதுமான அளவு இருப்பில் உள்ளது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீநாதா கூறியதாவது: 28-ஆம் தேதி இரவில் இருந்து பொதுமக்கள் வைத்தீஸ்வரன்கோயில் உள்ளே செல்லாமல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் யாரும் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு தரிசனம் செய்ய வரவேண்டாம் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu