குறுவை தொகுப்பு திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கும் : வேளாண்மைத்துறை அமைச்சர் தகவல்

குறுவை தொகுப்பு திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கும் : வேளாண்மைத்துறை அமைச்சர் தகவல்
X
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் (பைல் படம்)
குறுவை தொகுப்பு திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் ஆறு, வாய்க்கால் தூர்வாரும் பணிகளை தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மங்கைநல்லூரில் முன்னோடி விவசாயி சண்முகநாதனின் வயலில் சித்திரைபட்டம் உளுந்து சாகுபடி பணிகளை அவர் ஆய்வு செய்தார். முன்னதாக மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:

டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. அரசு விரைவில் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்டா மாவட்டத்தில் 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1.70 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

எஞ்சிய பகுதியில் பணிகள் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்வதில் பிரச்னை உள்ளது.

கடலங்குடியில் இயங்கிவரும் திறந்தவெளி நெல் கிடங்கு உள்ள இடத்தில் சேமிப்பு கிடங்கு அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

கடைமடை பகுதிக்கு தடையின்றி தண்ணீர் சென்று சேரும் வகையில் ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரை 70 சதவீத பணிகள் முடிந்துள்ளது. எஞ்சிய பணிகள் காவிரி நீர் வந்தடைவதற்குள் முழுமை பெறும். எனவே, காவிரி நீர் நிச்சயம் கடைமடை வரை சென்றடையும். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மூடப்பட்ட என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறப்பதற்கு அரவைக்கு தேவையான கரும்பு சாகுபடி குறைந்து உள்ளது.

விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்தால், ஆலையின் உறுதி தன்மையை ஆய்வு செய்தபின், ஆலையை மீண்டும் திறப்பது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி செய்வது குறித்து அளித்த தேர்தல் வாக்குறுதி பட்ஜெட் நிலவரத்தை பொறுத்து செயல்படுத்தப்படும். தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிச்சயம் நிறைவேற்றுவார்.

மயிலாடுதுறை மாவட்டம் தொடங்கப்பட்டு கரோனா பேரிடரால் பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகிறது. நிர்வாக பணிகள் படிப்படியாக தொடங்கப்படும் என்றார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், ராஜகுமார் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!