மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் சேதம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு இடங்களில் அறுவடை செய்ய வேண்டிய பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை விட்டுவிட்டு பெய்து வந்தது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. சராசரியாக 49.62 மில்லி மீட்டர் தற்போது வரை மழை பதிவாகியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 72 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டு தற்போது முழுவீச்சில் அறுவடை நடைபெற்று வருகிறது. 1 லட்சம் ஏக்கருக்குமேல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென்று பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் அறுவடை செய்ய வேண்டிய பல்லாயிரக்கணக்கான நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது. குத்தாலம் தாலுக்காவில் வழுவூர், பண்டாரவாடை, நெய்க்குப்பை, குமாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், மயிலாடுதுறை தாலுகாவில் மணல்மேடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலும் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து உள்ளன.
வயலில் தேங்கிய மழைநீரில் பயிர்கள் தண்ணீரில் கிடந்தாலே முளைக்க துவங்கும் மேலும் முற்றிய நெல்மணிகள் உதிர்ந்துவிடும் மகசூல் இழப்பு ஏற்படும், அறுவடைக்கு முன் ஊடுபயிராக விதைக்கப்பட்டுள்ள உளுந்துபயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 2 நாட்கள் மழைபெய்ததால் அறுவடை பணிகளை விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும், பல்வேறு இடங்களில் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்காக அடுக்கி வைத்திருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. தொடர்ந்து கனமழையால் பாதிப்பை சந்தித்து வரும் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லுக்கு ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வெண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu