வேன் கவிழ்ந்து காயம் அடைந்த மாணவ- மாணவிகளுக்கு கலெக்டர் ஆறுதல்
கலெக்டர் லலிதா ஒரு மாணவிக்கு ஆறுதல் கூறினார்.
மயிலாடுதுறை நகரில் உள்ள பள்ளிகளுக்கு கிராமப்புறங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான மாணவர்கள் தனியார் வாகனங்கள் மூலம் வந்து செல்கின்றனர். அவ்வகையில், இன்று மாலை பள்ளி நேர முடிவில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டது. மாப்படுகை, சோழம்பேட்டை, திருமங்கலம் மார்க்கமாக காளி ஊராட்சி வரை செல்லும் இந்த தனியார் வேன் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிகொண்டு கூறைநாடு வடக்கு சாலியத்தெருவில் சென்றபோது, அங்கு சாலையில் உள்ள புதைசாக்கடை ஆள்நுழைவுதொட்டி மீது ஏறி இறங்கியது.
இதில், தொட்டியில் சரியாக பொருத்தப்படாமல் இருந்த மூடி வேனின் சக்கரத்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதால், கிராங் சாப்ட் உடைந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இவ்விபத்தில், மாணவர்களுடன் வேன் சாலையில் கவிழ்ந்தது. வேனை ஓட்டிய கடுவங்குடியைச் சேர்ந்த மனோகர் எனபவர் அங்கிருந்து தப்பிஓடிய நிலையில் வேனில் சிக்கிதவித்த மாணவ, மாணவிகளை அப்பகுதி பொதுமக்கள் வேன் கண்ணாடியை உடைத்து மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இதில், ராமாபுரத்தைச் சேர்ந்த மாணவி வர்ஷினி(11), திருமங்கலத்தைச் சேர்ந்த மாணவர் ரோகித்(12), ஆனந்தகுடி மாணவி மனிஷா(11), திருமங்கலம் யாசினி(14), மாப்படுகை சக்திபிரியா(17), ஆர்த்தி(16), வினேஷ்(11), ஜெயஸ்ரீ(9), கனிஷா(5), ரத்னாஸ்ரீ(13), ஜனனி(14) உள்ளிட்ட 24 மாணவ, மாணவிகள் காயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
தகவல் அறிந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வருவாய் கோட்டாட்சியர் பாலாஜி உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று மாணவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu