மயிலாடுதுறை சின்னமேடு மீனவ கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல் சுவர்
மயிலாடுதுறை மாவட்டம் சின்னமேடு கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கல்சுவர் எழுப்புவதற்காக பூமி பூஜை போடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் காலமநல்லூர் ஊராட்சியில் சின்னமேடு மீனவ கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடல் சீற்றத்தின் போது கடல் நீர் சுமார் 100 மீட்டர் உள்வாங்கி ஊருக்குள் நுழைந்து கிராம மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.
இதனால், தங்கள் கிராமத்தில் கடல் அரிப்பை நிரந்தரமாக தடுக்கும் வகையில் நேர் கல் சுவர் அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் சின்னமேடு மீனவ கிராமத்தில் ரூ.9.78 கோடி மதிப்பீட்டில் நேர் கல் சுவர் அமைப்பதற்கான பூமிபூஜை இன்று நடைபெற்றது.
இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் பங்கேற்று அடிக்கல் நாட்டி, திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மீன்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் மீனவ பஞ்சாயத்தார், கிராம மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தினால் சின்னமேடு கிராமத்தில் கடல் அரிப்பும், கடல் நீர் உட்புகுவதும் தடுக்கப்படும் என்பதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu