மயிலாடுதுறையில் ஐப்பசி மாத பிறப்பு காவிரி துலா உற்சவம் தொடக்கம்
ஐப்பசி மாதம் பிறப்பையொட்டி மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் சுவாமிகள் தீ்ர்த்தவாரி நடைபெற்றது.
மயிலாடுதுறையில் பழமைவாய்ந்த அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் உள்ள அபயாம்பிகை காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாளும், புனித நீராடி, ஈசனை வழிபட்டு மயில் உரு நீங்கி சாபவிமோசனம் பெற்று இறைவனுடன் சேர்ந்ததாக ஐதீகம்.
மேலும் கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் தங்கள் பாவங்களை போக்கி கொள்ள துலா மாதமான ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி தங்கள் பாவசுமைகளை போக்கி கொண்டதாக புராணம் கூறுகிறது. எனவே, ஐப்பசி மாதம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு, காவிரியில் தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் சுவாமிகள் புறப்பாடு இன்றி அஸ்திரதேவர் மட்டும் காவிரி துலாக்கட்டத்திற்கு எடுத்து செல்லப்பட்டு துலா உற்சவம் நடைபெற்றது.
இந்த ஆண்டு ஊரடங்கு தளர்வுகளால் சுவாமி வீதியுலா செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஐப்பசி மாத துலா உற்சவம் மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் கோலாகலமாக இன்று துவங்கியது. துலா உற்சவத்தின் முதல் தீர்த்தவாரியான இன்று அபயாம்பிகை சமேத மாயூரநாதர், அறம்வளர்த்த நாயகி சமேத ஐய்யாறப்பர், ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் ஆலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் துலாக்கட்ட காவிரியில் இரண்டு கரைகளிலும் எழுந்தருளினர்.
அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். துலா உற்சவத்தை முன்னிட்டு 10 நாள் உற்சவமாக சிவாலயங்களில் திருக்கல்யாணம், திருத்தேர், அம்மாவாசை தீர்த்தவாரி, புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரி என்றழைக்கப்படும் கடைமுழுக்கு, முடவன் முழுக்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu