குத்தாலம் ஒன்றியக்குழு கூட்டத்தை புறக்கணித்து பாஜக கவுன்சிலர் தர்ணா போராட்டம்
குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவரை கண்டித்து 18-வது வார்டு பாஜக கவுன்சிலர் அலுவலக வாயிலில் அமர்ந்து கருப்பு கொடியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழுக்கூட்டம் ஒன்றிய குழுதலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவை சேர்ந்த 18 வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் வினோத் தனது வார்டில் உள்ள அடிப்படை வசதிகளில் உள்ள குறைகள் குறித்து பேசவிடாமல் தடுத்ததாக கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்து பாஜக ஆதரவாளர்களுடன் ஒன்றிய அலுவலக வாயிலில் அமர்ந்து கருப்பு கொடியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
ஒன்றிய குழு துணை தலைவர் முருகப்பா சொல்பவர்களை மட்டுமே அவையில் பேச அனுமதிப்பதாகவும், மக்களின் குறைகளை பேச அனுமதிக்கவில்லை என்று கூறி ஒன்றிய குழு நிர்வாகத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குத்தாலம் வட்டாட்சியர் கோமதி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திமுக நிர்வாகிகளும் குவிந்தனர். உறுப்பினர்கள் பிரச்னையை அலுவலகத்தில் பேச வேண்டும், பொதுமக்களை அழைத்து வந்து போராட்டம் நடத்தினால் ரோட்டில் நடத்துங்கள் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணம் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்று உறுப்பினரின் கோரிக்கை ஏற்கப்படும் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu