மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் சூபர் வைசரை தாக்கி பணம் கொள்ளை முயற்சி

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் சூபர் வைசரை தாக்கி பணம் கொள்ளை முயற்சி
X

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட செல்வம்.

மயிலாடுதுறை அருகே டாஸ்மாக் சூபர் வைசரை தாக்கி பணம் கொள்ளை முயற்சி நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தி கிராமத்தில் டாஸ்மாக் அரசு மதுபானக் கடை இயங்கிவருகிறது. இந்த கடையில் திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த செல்வம்(53) என்பவர் 5 வருடங்களாக சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று மதியம், மூன்று நாட்கள் விற்பனை செய்த மொத்த பணம் ரூ.6 லட்சத்தை எடுத்துக்கொண்டு கடையில் விற்பனையாளராக உள்ள சீர்காழியை சேர்ந்த கலியபெருமாள்(47) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் செலுத்துவதற்காக சென்றுள்ளார்.

சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் வங்கி விடுமுறை என்பதால் இன்று பணத்தை எடுத்து கொண்டு செல்லும் வழியில் வில்லியநல்லூர் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர்கள் 3 பேர் இருசக்கர வாகனத்தில் வந்து முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு கையில் வீச்சரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்வத்தை வழிமறித்து பணத்தை பிடுங்க முயற்சி செய்தனர்.

தப்பியோட முயன்ற செல்வத்தின் வலது கை மற்றும் முதுகில் கத்தியால் கீறியும், காலில் இரும்பு கம்பியால் மர்மநபர்கள் தாக்கியுள்ளனர். இதையடுத்து, செல்வம், கலியபெருமாள் இருவரும் கூச்சலிட்டதில் சாலையில் வந்தவர்களைக் கண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். அவ்வழியே வந்த போலீசார் ஒருவர் மணல்மேடு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்வத்தை மீட்டு வில்லியநல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story