பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: தருமபுரம் ஆதீனம் அருளாசி
தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்
மயிலாடுதுறையில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. சைவத்தையும், தமிழையும் வளர்க்கும் இந்த ஆதீனத்தின் குருமுதல்வரின் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் குருமுதல்வருக்கு குருபூஜை விழா நடைபெறும். இந்தாண்டு வருகின்ற 22-ஆம் தேதி தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியை சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று கடந்த மாதம் 27 ஆம் தேதி மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் சார்பில் பல்வேறு ஆதின கர்த்தர்கள் நேற்று முதல்வர் சந்தித்து ஓராண்டு நிறைவு பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து பட்டணப்பிரவேச தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. பட்டணப்பிரவேசம் தடையில்லாமல் நடைபெறும் என்றும் யாரும் சர்ச்சை கருத்துக்கள் பதிவிட வேண்டாம் எனவும், பட்டணப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும் என நேற்றிரவு தமிழகமுதல்வர் வாய்மொழியாக தெரிவித்ததாக தருமபுரம் ஆதீனகர்த்தர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி தடையை நீக்கி வருகின்ற 22ம் தேதி பட்டணப்பிரவேசம் பல்லக்கு நிகழ்ச்சியில் மனிதர்கள் பல்லக்கை தூக்கி செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கி ஆணையிட்டார்.
இது குறித்து குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலய மடத்தில் தங்கியுள்ள தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில் பட்டணப்பிரவேசம் நிகழ்வுக்கான தடையை நீக்க ஆதரவு தெரிவித்த அனைத்து பக்தர்களுக்கும் மற்றும் நடவடிக்கை எடுத்த முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர், ஆணையர் உள்ளிட்ட அனைவருக்கும் நல்லாசிகள். ஏற்கனவே ஆன்மீக அரசு என்று நான் சொன்னதை தற்போது தமிழக முதல்வர் மெய்பித்துள்ளார் எனவும் முதல்வருக்கு புகழாரம் சூட்டினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu