தருமபுரம் ஆதீன திருமடத்தில் நாளை அருங்காட்சியகம் திறக்க ஏற்பாடு
அருங்காட்சியகத்தில் வைக்கப்பட உள்ள பழங்கால பொருட்களை பார்வையிட்டார் தருமபுரம் ஆதீனம்.
மயிலாடுதுறையில் அமைந்துள்ள இந்தியாவின் தொன்மை வாய்ந்த ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். புதுமைக்கு புதுமையாய், பழைமைக்கு பழைமையாய் விளங்கும் 600 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்த சைவ ஆதீனத்தின் சார்பில் புராதன பொருட்களை இளைய தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ஆதீனத் திருமடத்தில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க 27-வது நட்சத்திர குருமணிகள் அருளாணை பிறப்பித்திருந்தார்.
அதன்படி, தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை விளக்கும் கலை நுட்பங்கள் வாய்ந்த பொருள்கள், அரிய புகைப்படங்கள், பல நாடுகளின் காசுகள், இசைக்கருவிகள் தொன்மையான சிலைகள் உள்ளிட்ட பழைமை வாய்ந்த பொருள்களை ஆதீனக் கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், கலை ஆர்வலர்கள் அருங்காட்சியகத்துக்கு வழங்கியுள்ளனர்.
இவற்றைக் கொண்டு ஆதீனத் திருமடத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) அருங்காட்சியகம் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இன்று அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது அவர், சாரங்கி, கொக்கரை தூந்தினா, பவுனி (சவுணிக்கை), பிளவுபட்ட பறை, மழைக்குச்சி, கல் நாகசுரம், மண்முழவு, ஒத்து, சனாய், சுருதிப்பெட்டி உள்ளிட்ட பழமைவாய்ந்த, வழக்கொழிந்த இசைக்கருவிகளை வாசித்தும், இசை அறிஞர்களைக் கொண்டு வாசிக்க கூறி கேட்டும் மகிழ்ந்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu