திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலய சுவாமி சன்னதியில் புகுந்த மழை நீர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது தரங்கம்பாடி தாலுகாவில் 24மணி நேரத்தில் நேற்று காலை 6மணி வரை 68 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர் தேங்கியது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் மழை வெள்ளநீர் நேற்று உட்புகுந்தது. கோயில் குளம் நிரம்பியதால் கோயிலிலிருந்து குளத்திற்கு செல்லும் வடிகால் வழியாக வெள்ள நீர் சுவாமி சன்னதியில் புகுந்து முழங்கால் அளவிற்கு தேங்கியது. மேலும் வெள்ள நீர் கொடிமரம் உள்ள வெளிப்புறத்திலும் சூழ்ந்தது. கோயிலில் தினந்தோறும் ஆயுள் விருத்தி வேண்டியும் 60 வயதில் சஷ்டியப்தபூர்த்திவிழா மற்றும் சதாபிஷேகம் கனகாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு திருமணங்கள் நடைபெற்று வரும் நிலையில் திருமணத்திற்கு வந்த பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.
திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சுவாமியை தரிசனம் செய்வதற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். கோயில் நிர்வாகத்தினர் நேற்று காலையில் இருந்து 2 மின் மோட்டார்களை கொண்டு குளத்தில் உள்ள தண்ணீரை சாலையில் உள்ள மழைநீர் வடிகால் மூலமாக வெள்ள நீரை வெளியேற்றி வருகின்றனர். இரண்டாவது நாளாக இன்றும் 3 மின் மோட்டார்கள் மூலம் குளத்தில் உள்ள மழை வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. குளத்தில் இருந்து தண்ணீர் குறைந்தால்தான் கோயிலில் உட்புகுந்த தண்ணீர் வடியும் என்பதால் தொடர்ந்து குளத்திலிருந்து தண்ணீர் இறைக்கப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu