மயிலாடுதுறை அருகே அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் போலீஸ் தடியடி
மயிலாடுதுறை அருகே அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் மோதல் ஏற்பட்டதால் அதில் பங்கேற்றவர்கள் சிதறி ஓடினர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று சட்ட மாமேதை அம்பேத்கரின் 65 ஆம் ஆண்டு நினைவு தினம் பல்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் தலைமையில் புதிதாக அம்பேத்கரின் திருவுருவப் படத்தை வைத்து அஞ்சலி செலுத்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் ஜாதி மோதல் ஏற்படும் என்று கூறி மற்றொரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் பட்டவர்த்தி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். பதட்டமான சூழ்நிலை நிலவியது.
தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஈழவளவன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது மற்றொரு பிரிவினர் கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு தரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். உடனடியாக போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் பட்டவர்த்தியில் டாஸ்மாக் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஐந்து பேர் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் மற்றும் மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பட்டவர்த்தி கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu