நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது 5 பிரிவில் போலீஸ் வழக்கு

நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது 5 பிரிவில்  போலீஸ் வழக்கு
X

சூர்யா மீது புகார் கொடுக்க வந்த பா.ம.க.வினர் (பைல் படம்)

நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவித்த பா.ம.க. பிரமுகர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நடிகர் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் அண்மையில் ஓ.டி.டி. இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த திரைப்படத்தில் குற்றவாளி கதாபாத்திரத்தின் பெயராக மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் தங்கள் குலத்தின் அடையாளமாக அக்னிகுண்டம் காட்டப்பட்டு உள்ளதாக காட்சிப்படுத்தப்பட்டு, ஜாதி மோதல்களை தூண்டும் வகையில் உள்ளதாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கடந்த 14-ஆம் தேதி அன்று நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்கிடம் புகார் மனு அளித்தனர்.

மேலும், மயிலாடுதுறை திரையரங்கில் சூர்யா நடித்த பழைய திரைப்படமான வேல் திரைப்படத்தின் காட்சிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி திரைப்பட நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் அவரை முதலாவதாக தாக்கும் நபருக்கு ரூ.1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும், இனி அவரது திரைப்படத்தை மயிலாடுதுறையில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் பேசியிருந்தார்.

இந்நிலையில் இன்று மயிலாடுதுறை காவல் நிலையத்தில் நடிகர் சூர்யாவை தாக்குபவருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று கூறிய பா.ம.க. மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருதரப்பினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவது, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல், வன்முறையை தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், உள்ளிட்ட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மயிலாடுதுறையில் பா.ம.க.வினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story