மயிலாடுதுறையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு

மயிலாடுதுறையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு
X
மூதாட்டியிடம் மர்மநபர் தாலிச்செயின் பறிக்கும் சி.சி.டி.வி. காட்சி.
மயிலாடுதுறையில் பட்டப்பகலில் மூதாட்டியிடம் தாலி செயின் பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை சேந்தங்குடி வள்ளலார் கோவில் ஒத்த தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் மனைவி கௌரி (57). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் மதியம் 3.30 மணியளவில் வள்ளலார் கோவில் அருகில் உள்ள பூக்கடை ஒன்றில் பூஜைக்காக மாலை வாங்கிக்கொண்டு ரெட்டை தெருவில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்களில் ஒருவர் திடீரென கௌரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பட்டப்பகலில் எதிரே சென்று பறித்துள்ளார். கௌரி செயினை காப்பாற்றிக்கொள்ள போராடிய நிலையில் தாலி செயினை அறுத்து கௌரியை கீழே தள்ளிவிட்டு மர்ம நபர் தப்பி சென்றுள்ளார். கௌரியின் கூச்சல் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால் அதற்குள் அந்த மர்மநபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான செயின் பறிப்பு காட்சிகளை கொண்டு 2 மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மர்மநபர் மூதாட்டியிடம் செயின்பறிக்கும் காட்சிகளும் மூதாட்டி செயினை மீட்க போராடி மர்மநபரால் கீழே விழும் சி.சி.டி.வி. காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மயிலாடுதுறை மக்களிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை காவல் நிலைய பகுதிகளில் தொடரும் வழிப்பறி சம்பவங்களை தடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story