ஆற்றில் குளித்த 2 வாலிபர்கள் நீரில் மூழ்கி பலி
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா எருக்கட்டாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பரமகுரு. இவர் சீயக்காய் பொடி தயாரிக்கும் குடிசைத் தொழில் செய்து வருகிறார். நேற்று மயிலாடுதுறை அருகே தலைஞாயிறு பகுதியில் குடிசை தொழில் பற்றி நடைபெற்ற பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட நண்பர்களான தஞ்சையை சேர்ந்த திவ்யா (22) கடலூரை சேர்ந்த பிரவீன் (24) திருச்சியை சேர்ந்த கிருஷ்ணன் (36) ஆகிய 3 பேரும் விருந்தினர்களாக பரமகுரு வீட்டிற்கு வந்துள்ளனர்.
இன்று வெளியூரிலிருந்து வந்த மூவரும் ஊரைச் சுற்றிப் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது அனந்தமங்கலம் மகி மலையாறு சட்ரஸ் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் திவ்யாவை கரையில் நிற்க வைத்துவிட்டு பிரவீன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி உள்ளனர். இதனை கண்ட திவ்யா கூச்சலிட்டுள்ளார், யாருக்கும் கேட்கவில்லை. தொடர்ந்து அவர் கிராமத்திற்குள் ஓடிவந்து நடந்த சம்பவம் பற்றி தெரிவித்ததும் பொதுமக்கள் விரைந்து சென்று ஆற்றில் மூழ்கிய இரு வாலிபர்களையும் மீட்க முயற்சித்துள்ளனர். முயற்சி பலனளிக்காத நிலையில் தகவலறிந்த பொறையார் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய 2 நபர்களையும் தேடியுள்ளனர். இதில் பிரவீன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து கிருஷ்ணன் உடலை தேடும் பணியில் காவல்துறையினரும் தீயணைப்பு படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu