தரங்கம்பாடியில் 2 பைபர் படகுகள் மோதி கவிழ்ந்து விபத்து: மீனவர்கள் குற்றச்சாட்டு

தரங்கம்பாடியில்  2 பைபர் படகுகள் மோதி கவிழ்ந்து விபத்து:  மீனவர்கள் குற்றச்சாட்டு
X

தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் விபத்துக்குள்ளான பைபர் படகுகள்

மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரத்தை சீரமைத்து உரிய முறையில் மாற்றி அமைத்து தரவேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை

தரங்கம்பாடியில் இரண்டு பைபர் படகுகள் மோதி கவிழ்ந்து விபத்துக்கு அப்பகுதியில் ரூ 170 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் துறைமுகத்தின் முகத்துவாரம் உரிய முறையில் அமைக்கபடாததே காரணம் என மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் விசைப்படகு, பைபர் படகு, நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். தரங்கம்பாடி மீனவர்களின் நீண்டநள் கோரிக்கை ஏற்று ரூ 170 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆரம்பம் முதலே துறைமுகத்தின் முகத்துவாரம் உரிய முறையில் அமைக்கப்படவில்லை என மீனவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக முகத்துவாரம் உரிய அளவில் இல்லாததால் கடல் அலைகளின் தாக்கம் அப்பகுதியில் அதிகரித்து காணப்படுவதால் மீன் பிடிக்கச் செல்லும் போதும் மீன்பிடித்து விட்டு கரை திரும்பும்போதும் முகத்துவாரம் அருகே தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு படகுகளும் மீனவர்களும் பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது துறைமுகத்தின் முகத்துவாரம் அருகே மீனவர்கள் சுப்பிரமணியன் மனைவி கோவிந்தம்மாள் மற்றும் வெற்றிவேல் ஆகிய இருவரின் படகுகள் நிலை தடுமாறி ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்தது. இவ்விபத்தில் இரு படகில் இருந்த மீனவர்கள் சிறு காயங்களுடன் நீந்தி கரை சேர்ந்தனர்.

இதனை கண்ட சக மீனவர்கள் விசைப்படகு மற்றும் பைபர் படகுகள் உதவியுடன் கவிழ்ந்த படகுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் போராடி கடலில் கவிழ்ந்த இரண்டு படகுகளையும் மீட்டு கரை சேர்த்தனர். 2 படகுகளும் முழுமையாக சேதமடைந்த நிலையில் மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்ததால் அப்பகுதி மீனவர்கள் நிம்மதி அடைந்தனர். அதே நேரம் தொடர் விபத்துக்கு காரணமாக உள்ள அமைந்துள்ள மீன்பிடி துறைமுகத்தின் முகத்துவாரத்தை சீரமைத்து உரிய முறையில் மாற்றி அமைத்து தரவேண்டும் என தரங்கம்பாடி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!