மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் 2 குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸ்காரர் ஒருவர் தடுத்து காப்பாற்றினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தனியே தீக்குளிக்க முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூரை அடுத்த அகரஆதனூரை சேர்ந்தவர் மதன்மோகன், இவர் தனியார் நிதி நிறுவனத்தில் விவசாயக் கடன் பெற்று 2 டிராக்டர்களை வாங்கியுள்ளார். இவரது டிராக்டர்களை ஜப்தி செய்து இவரது கையெழுத்தை போலியாக போட்டு மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி, சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதன்மோகனும் அவரது தாயார் உமாமகேஸ்வரியும் உடலில் டீசலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்கு சிறிது நேரத்திற்குள்ளாக சீர்காழியை அடுத்த கடவாசல் கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், அவரது மனைவி குணவதி ஆகிய இருவரும் சொத்துப் பிரச்சினையில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தனது சகோதரர்கள் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், புதுப்பட்டினம் காவல்துறையினர் தனது புகாரை பதிவு செய்த மறுப்பதாகவும் தெரிவித்து தீக்குளிக்க முயற்சி செய்தனர். அவரை பொதுமக்களும் காவல்துறையினரும் காப்பாற்றினர். ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பலத்த சோதனைக்குப் பிறகே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu