மயிலாடுதுறையில் கோபாலகிருஷ்ண பாரதியின் 34வது ஆண்டு இசை விழா
மயிலாடுதுறையில் கோபாலகிருஷ்ண பாரதியின் 34வது ஆண்டு இசை விழாவில் கலைஞர்கள் இசையால் ஆராதனை செலுத்தினர்.
மயிலாடுதுறையில் வள்ளலார் கோயில் எனப்படும் மேதா தட்சிணாமூர்த்தி கோயிலில் கோபாலகிருஷ்ண பாரதியின் 34வது ஆண்டு இசை விழா நடைபெற்றது. உ.வே.சாமிநாத அய்யரின் குருவான கோபாலகிருஷ்ண பாரதி ஆயிரக்கணக்கான தமிழ் பாடல்களை தமிழுலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர். கடுமையான சாதி கட்டுப்பாடுகள் இருந்த காலத்திலேயே தன்னுடைய தமிழ் இசைக் காவியமான நந்தன் சரித்திரத்திற்கு தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த நந்தன் என்ற கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து புரட்சிகரமான மாறுதல் செய்தவர். மயிலாடுதுறை ஆனந்ததாண்டவபுரத்தில் பிறந்த இவர் மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை சந்திக்க திருவையாறு சென்ற இடத்தில் 'சபாபதிக்கு வேறு தெய்வம்" என்ற பாடலை இயற்றியுள்ளார். சிவனையே பாடிவந்த சிவனேசச் செல்வரான இவர் 1896ம் ஆண்டு தமது 86வது வயதில் சிவராத்திரியன்று சிவபதம் எய்தினார். இவரது நினைவைப் போற்றும் வகையில் 34வது ஆண்டாக நடைபெற்ற இசை விழாவில், குமாரி அம்ரிதா முரளி மனமுருக பாடியதை இசை ஆர்வலர்கள் திரளானோர் கண்ணீர்மல்க கேட்டு ரசித்தனர். முன்னதாக, கலைமாமணி இஞ்சிக்குடி இ.பி.கணேசன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், சிதம்பரம் சுந்தர தீட்சிதர், சுனில் கார்க்யனின் பாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu