தாய்,மகள் மர்மமான முறையில் உயிரிழப்பு-போலீஸ் விசாரணை

தாய்,மகள் மர்மமான முறையில் உயிரிழப்பு-போலீஸ் விசாரணை
X

மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறையில் தாயும், ஒன்றேகால் வயது மதிக்கதக்க மகளும் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருவாவடுதுறை மேலக்கடை முடுக்குத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பார்த்திபன். ரயில்வே ஊழியரான இவர் தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கன்பேட்டையை சேர்ந்த செல்லதுரை மகள் செல்வகுமாரி (24) என்பவரை காதலித்து இருவரது பெற்றோர் சம்மதத்துடன் 2019ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு லிவிஷா என்ற ஒன்றேகால் வயது பெண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது செல்வகுமாரிக்கு 3 பவுன் நகை மட்டுமே அவரது பெற்றோர் போட்டுள்ளனர்.

இதையடுத்து கடந்த சில மாதங்களாக பார்த்திபனின் தாயார் தனலட்சுமி தனது மருமகள் செல்வகுமாரியிடம் 30 பவுன் நகை வரதட்சணையாக கேட்டு துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. சமீபத்தில் செல்வகுமாரியின் தந்தை செல்லதுரைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கேட்ட வரதட்சணையை உடனடியாக கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை செல்வகுமாரி பெற்றோரிடம் பேசியுள்ளார். இன்று காலையும் செல்வகுமாரி வாசல் தெளித்து கோலம் போட்டதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் செல்வகுமாரி வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார்.

மேலும் அருகில் உள்ள கட்டிலில் செல்வக்குமாரியின் ஒன்றேகால் வயது பெண் குழந்தை லிவிஷாவும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் குத்தாலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் சம்பவம் குறித்து ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தாய், மகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா