நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
X

ஆறு மாதங்களுக்கும் மேலாக பாதாளசாக்கடை கழிவுநீரை அகற்றவில்லை என மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் நடத்தினர்.

மயிலாடுதுறை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் நடைமுறையில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நகராட்சி முறையான பராமரிப்பு இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் குழாய்கள் உடைந்து நகர் முழுவதும் கழிவுநீர் வெளியேறி வருகிறது. நகரின் ஒட்டுமொத்த கழிப்பறை நீர் பல்வேறு குளங்களிலும் காவிரி ஆற்றிலும் வடிய விடுவதுடன், மழைநீர் வடிகால் முழுவதும் பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது.

கடந்த 6 மாதத்திற்கு மேலாக மயிலாடுதுறை நகராட்சி 20வது வார்டு மாமரத்து மேடை பகுதியில் கழிவுநீர் வெளியேறி சாலை முழுவதும் குளம் போல் தேங்கி நிற்பதால் அப்பகுதி வழியாக ஐந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இந்த பாதாள சாக்கடை கழிவுநீர் குடிநீரில் கலந்து வருவதால் பல்வேறு இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை சொல்லியும் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பிரச்சனை குறித்து மூன்று நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags

Next Story