தருமபுர ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு அனுமதி
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் நடைபெறவுள்ள ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் என்ற நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் தூக்கி செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளதாகவும், அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அறிக்கை அளித்ததன் பேரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23ன் படி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதினகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவிற்கு மதுரை ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம், உள்ளிட்ட பல்வேறு ஆதீனகர்த்தர்கள் மற்றும் ஆன்மீக பேரவைகளை கண்டனம் தெரிவித்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தருமபுர ஆதீனத்தை நான் தோளில் சுமப்பேன் என கூறியிருந்தார்.
இதேபோல் விஜயகாந்த், உள்ளிட்டோரும் தருமபுர ஆதீனம் பட்டணப்பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இருந்தனர். இதனிடையே சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தருமபுர ஆதீனம் பட்டணப்பிரவேச விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தருமபுர ஆதீனம் பட்டணப்பிரவேசத்திற்கு அனுமதி அளித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். மேலும், பட்டணப்பிரவேச நிகழ்ச்சியில் தரும்புர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை என ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிட்ட ஆணையை விலக்கிக் கொள்வதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu