பஞ்சர் ஆன டயருடன் திருச்சிக்கு வந்த மலேசிய விமானம்: பயணிகள் அதிர்ச்சி

பஞ்சர் ஆன டயருடன் திருச்சிக்கு வந்த மலேசிய விமானம்: பயணிகள் அதிர்ச்சி
X

டயர் பஞ்சர் ஆன மலேசிய விமானம்.

பஞ்சர் ஆன டயருடன் மலேசிய விமானம் திருச்சிக்கு வந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வரும் மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக தினந்தோறும் இரவு 9.20 மணிக்கு திருச்சிக்கு வந்து, பின்னர் இரவு 10.20 மணிக்கு கோலாம்பூர் புறப்பட்டு செல்லும். இந்த விமானம் கோலாலம்பூரில் இருந்து தாமதமாக புறப்பட்டு 10.20 மணிக்கு திருச்சிக்கு வந்தது.

திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக அந்த விமானத்தை ஓட்டி வந்த விமானிகள், சக்கரங்களை வெளியே வரச்செய்யும் பொத்தானை இயக்கி உள்ளனர். சக்கரம் வெளியே வந்தபோது, அதனை கவனித்த விமானிகளுக்கு அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.காரணம் பின்பக்கத்தில் உள்ள இடதுபுற டயரில் காற்று இல்லாமல் பஞ்சராகி இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து உடனடியாக திருச்சி விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் அனுப்பினர். பரபரப்பான கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள்,உடனடியாக விமானம் தரை இறங்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள விமான நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர். தீயணைப்பு வண்டி உள்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் உடனடியாக தயார் நிலைக்கு வந்தது.

இதனை தொடர்ந்து, தைரியமாக விமானத்தை தரை இறக்குமாறு, விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானிகளும் சாதுர்யமாக செயல்பட்டு, வேக கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரை இறக்கினர். விமானம் ஓடுபாதையை தொட்ட உடனேயே விரைவாக வேகத்தை குறைத்துவிமானத்தை தொடர்ந்து தரையில் ஓட விடாமல் நிறுத்தினர். பின்னர் மெதுவாக விமானத்தை இயக்கி பயணிகள் இறங்கும் இடத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இதனால் அதில் பயணம் செய்து வந்த 180 விமான பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டதோடு, விமானியையும் கைத்தட்டி பாராட்டி உள்ளனர்.

இந்த விமானம் மீண்டும் கோலாலம்பூருக்கு புறப்பட்டு செல்ல இயலாததால் அதில் பயணம் செய்ய காத்திருந்த 176 பயணிகளும் திருச்சியில் தங்க வைக்கப்பட்டனர். மலேசியாவில் இருந்து புதிய டயர்கள் விமானம் மூலம் வரவழைக்கப்பட்டு, தரையிறங்கிய விமானத்தில் பொருத்தப்பட்டது.அதன் பின்னர் ஒரு நாள் தாமதமாக அந்த விமானம் 135 பயணிகளுடன் மலேசியா புறப்பட்டு சென்றது.

டயர் பஞ்சரான நிலையில் விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்