முண்டாசுக்கவி மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு தினம்

மகாகவி சுப்ரமணிய பாரதியார்
சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு டிசம்பர் 11, 1882-இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார். 1887-ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரின் பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார்.
தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897-ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898-ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டதால், எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது.
சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904-ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார்.
பாரதி தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார்.
1921ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921 செப்டம்பர் 11 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார்.
தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது.
இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிர்க்கான பல்தொழில்நுட்பக் கல்லூரியும், பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்குப் பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu