விவேக் இறக்கவில்லை நம்முடன்தான் இருக்கிறார் - நடிகர் வடிவேலு இரங்கல் செய்தி

விவேக் இறக்கவில்லை நம்முடன்தான் இருக்கிறார் - நடிகர் வடிவேலு இரங்கல் செய்தி
X

நடிகர் விவேக் இறக்கவில்லை அவர் நம்முள் தான் இருக்கிறார். அவர் விதைத்துச் சென்ற கருத்துக்கள் நம்மோடு இருக்கின்றன என்று சக நடிகர் வடிவேலு இரங்கல் செய்தி விடுத்துள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இறந்த செய்தியைக் கேட்டு அவரது சக நடிகர் வடிவேலு மதுரையிலிருந்து இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் பேசியதாவது,

என்னுடைய நண்பன் விவேக் மாரடைப்பின் காரணமாக இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரும் நானும் நிறைய தமிழ் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். நடிகர் விவேக் குறித்து பேசும்போது எனது துக்கம் தொண்டையை அடைக்கிறது. மிகவும் நல்லவர் என்பது மட்டுமல்ல பொது நல சிந்தனை என்பது அவருக்கு அதிகம் இருந்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமோடு மிக நெருக்கமாக இருந்த நபர்களில் விவேக்கும் ஒருவர். எய்ட்ஸ் சுற்றுச்சூழல் உள்ளிட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டினார். நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் உரிமையோடு பழகினோம். அவரைப் போன்று மிக வெளிப்படையாக பேசக் கூடிய நபரை பார்ப்பது அரிது.

என்னுடைய எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்களில் அவரும் ஒருவர். நானும் அவருக்கு அப்படித்தான். நடிகர் விவேக் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் மனதில் பதிகின்ற ஒன்றாகும். என்னைவிட எதார்த்தமாகவும் எளிமையாகவும் பேசக்கூடியவர். அவருக்கு இப்படி ஒரு மரணம் நிகழ்ந்தது என்னால் தாங்க முடியவில்லை.

என் தாயாரோடு மதுரையில் இருக்கின்ற நான் சென்னைக்குச் சென்று நேரடியாக அஞ்சலி செலுத்த முடியாத நிலையில் இருக்கிறேன். நடிகர் விவேக்கிற்கு எனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்பட ரசிகர்கள் அனைவரும் இந்நேரத்தில் தைரியமாக இருக்க வேண்டும். யாரும் மனதை விட்டு விடக் கூடாது‌. விவேக் இறக்கவில்லை உங்கள் ஒவ்வொருவரோடு தான் அவர் இருக்கிறார். மக்களோடு மக்களாக அவர் நிறைந்திருக்கிறார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்' என இந்த வீடியோவில் நடிகர் வடிவேலு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!