மதுரையில் புகைப்படக் கண்காட்சியை மத்திய நிதி அமைச்சர் துவக்கம்
உலகப் பாரம்பரிய வார விழாவையொட்டி மதுரையில் தொல்லியல் துறையின் புகைப்படக் கண்காட்சியை தொடங்கிவைத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
உலகப் பாரம்பரிய வார விழா நவம்பர் 19 முதல் 25ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் மற்றும் மதுரை தியாகராசர் கல்லூரி ஆகியவை இணைந்து ''தென் தமிழக கோயில்கள்'' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த புகைப்படக் கண்காட்சியை மதுரை தியாகராசர் கல்லூரி வளாகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து விழாவில் பேசிய மத்திய அமைச்சர், தமிழகத்தில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மனவேதனை என்னிடத்தில் இருந்தது, தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அருமையாக சிற்பங்களாக வடித்துள்ளனர் .
அமைச்சர் வருகிறார் என பாரம்பரிய இடங்களில் வெள்ளை அடித்து விடுகிறார்கள். வெள்ளை அடிக்கபட்டதற்கு பின்னால் உள்ள சரித்திரம் யாருக்கும் தெரிவதில்லை, என்ற அவர், தொல்லியல் பாறைகள் சிதிலமடைந்து உள்ளது. மனதுக்கு வேதனையாக உள்ளது, தமிழ் இலக்கியங்களுக்கும் குடைவரை கோவில்களுக்கும் நெடிய தொடர்புகள் உள்ளன, குடைவரை கோவில்களில் உள்ள எழுத்துக்களுக்கும் தமிழ் மொழியின் ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றுக்கும் தொடர்புள்ளன.
மேலும், நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம், அதனை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற கூறிய அமைச்சர், மாணவர்கள் மருத்துவர், பொறியாளர் என ஆகலாம், ஆனால் நம்முடைய தமிழ் மரபுகளை அறிந்து பாதுகாக்க வேண்டும்.
மேலும் நமக்கு அருகிலுள்ள பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் பல்வேறு இடங்களுக்கு சென்று அனைவரும் அதனை பார்வையிட வேண்டும் என்றும் அவ்வாறு பார்த்தவற்றை அதன் பழமை குறித்தும் அறிந்து கொண்டு தகவல்களை செய்தித்தாள்கள் மற்றும் பல்வேறு சமூக ஊடகங்கள் வழியாக பகிரவேண்டும் அப்போது தான் அனைவரும் இதைப்பற்றி அறிந்து கொள்ள முடியும் என்றும், குறிப்பாக மாணவ மாணவியர் இதனை ஆர்வத்துடன் செயல்படுத்திட வேண்டும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே தமிழகத்தில் உள்ள உலகப் பாரம்பரிய சின்னங்களான தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், திருச்சி குடைவரைக் கோயில், திருமயம் கோட்டை, கன்னியாகுமரி மாவட்டத்தின் சித்ரால் பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயில் ஆகிய இடங்களில் பாரம்பரிய வாரவிழா கொண்டாடப்படவுள்ளது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கலாச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் அறிவுசார் போட்டிகளுக்கு இந்திய தொல்லியல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu