திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான இடம் தனிநபருக்கு பத்திரப் பதிவு செய்யப்பட்டதா? ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவு...
உயர் நீதிமன்ற மதுரை கிளை. (கோப்பு படம்).
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு நடைபெறும் கந்தசஷ்டி விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சொந்தமாக திருச்செந்தூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் சொத்துக்கள் உள்ளன. இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, திருச்செந்தூரை சேர்ந்த வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "திருச்செந்தூர் கோயிலுக்கு சொந்தமான துவாதசி மடம் பகுதி தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதனை மீட்டு மீண்டும் கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்." என்றும் மனுவில் வேல்முருகன் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனு குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் அறியக்கூடிய இடமாக கோயில்கள் உள்ளன என பலமுறை இந்த நீதிமன்றம் கூறியுள்ளது. கலை, அறிவியல் மற்றும் சிற்பத்துறைக்கு சாட்சியாகவும் கோயில்கள் உள்ளன. மத ரீதியான சொத்துக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றை பராமரிப்பதன் மூலம் வருவாய் பெற முடியும். அதன் மூலம் அந்த சொத்துக்களை பாதுகாக்க முடியும்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு கோயில் சொத்துக்களை பராமரிப்பது மற்றும் பாதுகாப்பது போன்ற பொறுப்புகள் உள்ளன. அதன் வருவாயை சரியான செலவினங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் குறிப்பிட்டுள்ள சொத்துக்கள் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டது ஆகும்.
அதன் பின்னர் அது அன்னதானம் வழங்கக்கூடிய இடமாக துவாதசி அன்ன தான அறக்கட்டளை மற்றும் அபிவிருத்தி அறக்கட்டளையிடம் இருந்து தற்போது தனி நபருக்கு விற்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். கிராம நிர்வாக அதிகாரி தெரிவித்ததன் படி மனுதாரர் தெரிவித்துள்ள இடம் பதியப்படும்போது இரு வேறு தகவல்கள் உள்ளது.
எனவே, வருவாய்த்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத் துறையினர், கோவில் நிர்வாகம் ஆகியோர் இணைந்து மனுதாரர் குறிப்பிட்டுள்ள இடம் குறித்து ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாகவும் இத்துடன் இந்த வழக்கை முடித்து வைப்பதாகவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu