உடன்குடி பத்திரப் பதிவு அலுவலக கட்டிட விவகாரம்.. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு..

உடன்குடி பத்திரப் பதிவு அலுவலக கட்டிட விவகாரம்.. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு..
X

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பத்திரப் பதிவு அலுவலக கட்டிட விவகாரம் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், உடன்குடியில் அனல் மின் நிலைய கட்டிடப் பணி கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களால் தாமதப்பட்டது. பின்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கட்டிடப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும், தற்போது உடன்குடி அருகே குலசேகரன்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது. இந்த இரு திட்டங்களுக்காக உடன்குடி பகுதியில் சுமார் 3,000 ஏக்கர்க்கு மேல் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களைப் பற்றி அறிந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் சில முதலீட்டாளர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தங்களுக்குள் நிலங்களை மாற்றி மாற்றி பத்திரங்களை உடன்குடி பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்து வந்தனர்.

இதற்கிடையே, உடன்குடி கிராமத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பத்திர பதிவு துறை அலுவலகத்தை இடமாற்றம் செய்து, புதிய இடத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக உடன்குடியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் குணசீலன் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

சென்னையில் வசித்து வரும் புகழேந்தி என்பவர் உடன்குடி அனல் மின் நிலையம் அருகே, உடன்குடி நகரில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் வெளியே 2013 ஆம் ஆண்டு ஜோதி நகர் என்ற பெயரில் அரசு அனுமதி பெற்று வீட்டுமனை செய்ய தொடங்கினார்.

அங்கு அவர் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை நடைபெறாததால் அருகில் அவரது மனைவி சசிகலா பெயரில் வீட்டுமனை அங்கீகாரம் இல்லாமல் 6 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தில் உடன்குடி பத்திர பதிவு அலுவலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்ட சுமார் 20 சென்ட் நிலம் நன்கொடையாக அளித்து உள்ளார்.

அந்த இடம் உடன்குடி நகரின் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் நகருக்கு வெளியே உள்ளது. உடன்குடி பேருந்து நிலையத்தின் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலக வளாகத்தில் சுமார் 3 ஏக்கருக்கு மேல் காலி இடம் உள்ளது.

அந்த இடங்கள் அரசு கட்டிடங்கள் கட்ட நன்கொடையாக அளிக்கப்பட்டது. பத்திர பதிவு துறையினர் உடன்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தில் பத்திர பதிவு அலுவலகத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டாமல், சசிகலா நன்கொடையாக அளித்த இடத்தில் நிரந்தர கட்டிடம் கட்டுவதாக அறிவித்த போது மக்கள் மத்தியில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி அங்கு கட்டிடம் கட்டும் பணி ஆரம்பித்து தற்போது முடிவடையும் சூழலில் உள்ளது. மேலும், இடத்தை நன்கொடையாக கொடுத்த சசிகலாவின் கணவர் புகழேந்தி தனது இடத்தில் பத்திர பதிவு அலுவலகத்திற்கு தேவையான எழுத்தர் மற்றும் ஜெராக்ஸ் கடைகள் விலைக்கு மற்றும் வாடகைக்கு விடும் வகையில் கட்டி வருகிறார்.

பத்திர பதிவு துறை அதிகாரிகள் தனி நபர் ஆதாயத்திற்காக நன்கொடையாக பெறப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டி உள்ளனர். அதனால் உடன்குடி பத்திர பதிவு அலுவலகத்தை நகரின் மையப் பகுதியில் காட்டுக்குள் பொது மக்கள் நலன் கருதி இடமாற்றம் செய்ய வேண்டும் என குணசீலன் மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு அலுவலகங்கள் கட்டப்படும் போது பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அரசு அலுவலகங்கள் கட்டப்படும் போது நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கு குறித்து பத்திர பதிவுத்துறை தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர். மேலும், இரு வாரங்களில் நிலை அறிக்கை (ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்) தாக்கல் செய்யும் வரை பத்திர பதிவு அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கூடாது என்றும், ஏற்கெனவே இதே காரணங்களுக்காக உடன்குடி வியாபாரிகள் சங்க தலைவர் ரவி மற்றும் சாதிக் தொடர்ந்த வழக்கை இந்த வழக்குடன் சேர்த்தும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil