முல்லைப் பெரியாறு அணை திறப்பு: பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கண்டனம்
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை
முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக உரிமைகளை அரசு விட்டுக் கொடுக்கிறது என்றும், அவசரமாக தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி : முல்லை பெரியாறு அணையில் 139 அடி வரைக்கும் தண்ணீரை தேக்கி வைக்கலாம் என்று நீதிமன்றம் சொன்ன பிறகும், 136 அடியில் அணையை திறக்க வேண்டிய அவசியம் என்ன?. கம்யூனிஸ்ட் கட்சி உடனான கூட்டணி காரணமாக கேரள அரசிடம், தமிழக அரசு உரிமைகளை விட்டுக் கொடுக்கிறதா?.முல்லை பெரியாறு அணை குறித்து ஏன் மக்களிடம் பீதியை ஏற்படுத்த வேண்டும்?
வைகை அணையில் தேங்கி உள்ள வண்டல் மண் காரணமாக விவசாயிகளுக்கு போதிய நீர் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, அதனை அகற்றி விட்டு கூடுதலாக 5 முதல் 7 டி.எம்.சி வரை தண்ணீரை தேக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பயணத்தின் போது மாணவர்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. எனவே, அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
புதிய கல்வி கொள்கையில் என்ன பிரச்னை உள்ளது என்பதை தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும்.காங்கிரஸ் ஆட்சி காலங்களில் இரண்டு முறை ஹிந்தியை திணிக்க முயற்சி நடந்தது. ஆனால், பாஜக அரசு மூன்று மொழிகளை தேவையெனில் கற்கலாம் என்கிற வாய்ப்பை வழங்கியுள்ளது. கல்வி கொள்கையில் செய்யப்பட்ட மாற்றங்களை மத்திய அரசு தானாக முடிவு செய்யவில்லை, அதில் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இருந்தார்கள். தமிழகத்தை சேர்ந்த கல்வி வல்லுனர்கள் கருத்தும் கேட்கப்பட்டு தான் அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே, அதில் என்ன சிக்கல் உள்ளது என்பதை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் விளக்க வேண்டும்.
தேவர் ஜெயந்தி போன்ற ஜெயந்தி விழாக்களில் இளைஞர்கள் அராஜகத்தில் ஈடுபடுவதற்கு காரணம் அரசின் கட்டுப்பாடுகள் தான். அது தான் அமைதியாக வரும் இளைஞர்களை காவல்துறை பாதுகாப்பு இல்லாத இடங்களில் தவறுகளை செய்ய தூண்டுகிறது. எனவே, ஜாதி தலைவர்களை அழைத்து பேசி அசம்பாவிதங்களை தவிர்க்க செய்ய வேண்டியது என்ன என்பது தொடர்பாக அரசு முடிவெடுக்க வேண்டும்.
சசிகலா இணைந்தால் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்குமா என்பது குறித்து கேள்விக்கு,சசிகலாவை ஏற்பது அதிமுகவின் கையில் உள்ளது. ஆனால்,அதிமுக உடனான எங்கள் கூட்டணியில் எந்த பிளவும், பிரச்னையும் இல்லை.அதிமுக பலமாக இருக்க வேண்டும் என்பது தான் பாஜக விருப்பம். அதிமுகவில் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பொதுக்குழு கூட்டி சரியான முடிவு எடுப்பார்கள். அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து கருத்து சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை என்றார் அண்ணாமலை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu