கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய மதுரை: அமைச்சர் வருத்தம்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கிய மதுரை: அமைச்சர் வருத்தம்
X

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மதுரை மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதில் மிகவும் பின்தங்கி உள்ளது என்று, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார்

ஒமிக்ரான் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுரை விமான நிலையத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தென்னாப்பிரிக்காவில் உருவான புதிய வகை உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் எவரும் ஒமிக்ரான் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகவில்லை எனத் தெரியவந்துள்ளது. அதேபோன்று மதுரை விமானநிலையத்திலும் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஆகும் என்பதால், அக்குறிப்பிட்ட விமான நிலையங்களில் அவர்களைத் தங்க வைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெகட்டிவ் எனத் தெரிந்த பிறகு அவர்கள் தத்தமது வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர். மேலும் வீடுகளில் அவர்கள் 7 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுவதோடு, அவர்கள் தொடர்ந்து சுகாதாரத்துறையின் மூலமாக கண்காணிக்கப்படுவார்கள்.

ஒமிக்ரான் வைரஸ் குறித்து முழுமையாக இன்னும் தெரியவில்லை. ஆகையால், அதன் தன்மை, வேகம் ஆகியவற்றைப் பொறுத்து என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படலாம் என்பது குறித்து தெரிய வரும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் தற்போது தமிழகம் முழுவதும் 78 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. இருந்தபோதும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் என தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர் பண்பாடு, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றில் பெருமைக்குரிய மதுரை மாவட்டம்தான் தற்போது தடுப்பூசி விசயத்தில் மிக மிகக் குறைவான எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. மதுரையைப் பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில் 71 விழுக்காடுதான் உள்ளது. ஆனால் ஒட்டு மொத்த தமிழகம் 79 விழுக்காடு செலுத்தியுள்ளது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியதில் தமிழகம் 45 விழுக்காடு என்றால் மதுரை 32 விழுக்காடுதான் செலுத்தியுள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரிய விசயம். ஆகையால் மதுரை மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வர வேண்டும் என்றார்.

பேட்டியின்போது சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனீஷ் சேகர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்