திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி தேரோட்டம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி தேரோட்டம்
X

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனி பெருவிழாவாகும். 15 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு முருகப்பெருமான் தெய்வானையுடன் காலையில் பல்லக்கிலும், மாலையில் தங்க மயில் வாகனம், குதிரை வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முருகப் பெருமான்-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் உற்சவர் சன்னதியில் முருகன்-தெய்வானைக்கு பால், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் 5.30 மணிக்கு தேரில் எழுந்தருளினார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிரிவலப் பாதை வழியாக ஆடி அசைந்து சென்றது பக்தர்களை பரவசப்படுத்தியது. தேரோட்டத்தில் மதுரை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai future project