கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்.. டிசம்பர் 19 ஆம் தேதி நடத்த நீதிமன்றம் அனுமதி...

கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல்.. டிசம்பர் 19 ஆம் தேதி நடத்த நீதிமன்றம் அனுமதி...
X

உயர் நீதிமன்ற மதுரை கிளை. (கோப்பு படம்).

கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை டிசம்பர் 19 ஆம் தேதி நடத்திக் கொள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, கரூர் மாவட்டத்தில் உள்ள 12 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, தலைவர் மற்றும் துணைத் தலைவர் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதன்படி, கரூர் மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 12 உறுப்பினர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த 7 பேரும், திமுகவைச் சேர்ந்த 5 பேரும் வெற்றி பெற்றனர். அதன் பிறகு நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த கண்ணதானும், துணைத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த தனுஷ் என்ற முத்துக்குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராக இருந்த தனுஷ் என்ற முத்துக்குமார் தனது கவுன்சிலர் மற்றும் துணைத் தலைவர் பதவியை கடந்த ஆண்டு ராஜிநாமா செய்தார். இதனால், காலியாக இருந்த உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் திமுகவைச் சேர்ந்தவர் வெற்றி பெற்ற நிலையில், துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் உள்ளது.

இந்த நிலையில், கரூர் மாவட்ட பஞ்சாயத்தைச் சேர்ந்த உறுப்பினரான திருவிகா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:

கரூர் மாவட்டத்தில் 12 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். அதில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மற்றும் துணைத் தலைவர் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கிடையே, கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராக தனுஷ் என்ற முத்துக்குமார், கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது கவுன்சிலர் மற்றும் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

எனவே, காலியாக உள்ள கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான தேர்தலை நடத்த வேண்டும். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்து கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:

கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவருக்கான தேர்தலை டிசம்பர் 19 ஆம் தேதி நடத்திக் கொள்ளலாம். தேர்தல் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். மேலும், வாக்குப் பதிவு வெற்றி விவரங்களை நீதிமன்ற தீர்ப்பு வழங்கிய பின் வெளியிட வேண்டும்.

தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் நடத்திய மற்றும் வாக்கு பதிவு விவரங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் மனுதாரருக்கு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

கரூர் மாவட்ட பஞ்சாயத்தில் மொத்தமுள்ள 12 உறுப்பினர்களில் தலைவர் உள்ளிட்ட அதிமுகவினர் 6 பேரும், திமுகவினர் 6 பேரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil