இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரையில் டெலிமெடிசின் ரோபோக்கள் அறிமுகம்
நோயாளிகளுக்கு இடம் நேரம் தூரம் ஆகியவற்றை பார்க்காமல் சிகிச்சை அளிக்கும் வகையில் டெலிமெடிசின் ரோபோக்களை இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம். இதன் மருத்துவர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உதவி செய்யும் வகையில் 16 டெலிமெடிசின் ரோபோக்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ரோபோக்கள் உதவியுடன் உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளின் சிறப்பு மருத்துவர்களை கலந்து ஆலோசிக்கவும் 24 மணி நேரமும் நோயாளிகளைக் கண்காணிக்கவும் முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ் குருசங்கர் காணொலி காட்சி வாயிலாக விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், தற்போது நிகழ்ந்து வரும் கரோனா பெருந்தொற்று காலத்தின்போது பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்கு இந்த ரோபோக்களே பெரும் பங்கு வகித்துள்ளன. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி இந்த ரோபோக்களால் பிற நோயறிதல் சாதனங்களில் இருந்து தரவுகளை சேகரிக்கவும், அவற்றை ஆய்வு செய்து துல்லியமான முடிவுகளை மருத்துவர்கள் எடுக்க உதவவும் இயலும். நோயாளி-மருத்துவர் கலந்துரையாடலை எளிதாக்க டிஸ்பிளே மானிட்டர்கள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதால், நோயாளிகளுடன் உறவினை மேம்படுத்தவும் இந்த ரோபோக்களால் இயலும். இத்தகைய தொலை மருத்துவ ரோபோக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதனால், துணை மருத்துவ பணியாளர்களின் வேலைவாய்ப்புகளை அகற்றவோ அல்லது குறைக்கவோ போவதில்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில், மருத்துவர்கள் துல்லியமாக நோய்களை கண்டறிய உதவுவது, அவர்களது திறன்களை மேலும் உயர்த்துவது ஆகியவையே இந்த ரோபோக்களின் பிரதான நோக்கமாகும். அதுமட்டுமன்றி நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், பல மைல்களுக்கு அப்பால் இருக்கும் அவர்களது வீட்டில் இருந்தாலும் இச்சேவையை பெற இயலும் என்பதே முக்கியமானது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu