தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்பது தவறானது: ஆளுநர் தமிழிசை பேட்டி
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
தெலுங்கானா மாநில அளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து வரவேற்பு அளித்தார்கள். தொடர்ந்து, சுவாமி தரிசனத்துக்குப் பிறகு தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மீனாட்சியை வணங்குவதில் எனக்கு எப்போதும் மகிழ்ச்சிதான். இந்திய குடியரசு தலைவர் சமீபத்தில் இங்கு வழிபாடு செய்திருந்தார். நாட்டின் முதல் குடிமகனாக ஒரு பெண் இருக்கும் பெருமையை பிரதமர் ஏற்படுத்தி தந்துள்ளார். ஆளுநர்களுக்கு பயிற்சி அளிக்கும் பட்டறையாக ராஜ்பவன் உள்ளதாகவும், தமிழக மக்கள் மீது எங்களுக்கு அன்பு இல்லை என்று எம்பி வெங்கடேசன் தெரிவிக்கிறார்.
தமிழக மக்கள் மீது உண்மையில் அதிக அன்பு கொண்டு உள்ளோம். அப்படி அன்பு செலுத்திய காரணத்தால் தான் இந்தியாவில் 4 மாநில ஆளுநர்களாக தமிழர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வெங்கடேசன் எம்.பி. எங்களைப் பற்றி தவறாக திரித்து எழுதி கொண்டிருக்கிறார். ஆளுநர்களுக்கு யார் அங்கீகாரம் கொடுத்தாலும் நாங்கள் கொடுக்க மாட்டோம் என்பது போல பேசும் எம்பி வெங்கடேசனுக்கு தான் உண்மையில் தமிழக மக்கள் மீது அக்கறையில்லை.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உலக தரத்தில் கட்டப்பட வேண்டிய ஒன்று. ஏற்கெனவே, 50 மாணவர்கள் படிக்கும் நிலையில் கூடுதலாக மாணவர்கள் படிக்கும் போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். தமிழகத்திற்கு எய்ம்ஸ் வர வேண்டும் என மத்தியில் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் தான் நினைத்தார்கள். முந்தைய ஆட்சியாளர்கள் நினைக்கவில்லை.
ஹைதராபாத்தில் கூட எய்ம்ஸ் கட்டி முடிக்கும் வரை மாணவர்கள் தற்காலிகமாக வேறு கல்லூரியில் தான் படித்தார்கள். சென்னை, மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகளை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. ஆயுஷ்மான் திட்டம் போன்று யாரும் சிந்திக்காத திட்டங்களை எல்லாம் பிரதமர் சிந்தித்து செயல்படுத்தி வருகிறார். எய்ம்ஸ் விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது என சொல்லும் கருத்து தவறானது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu