மதுரை ரயில் பெட்டி தீ விபத்து சதி வேலையா? ஏடிஜிபி சொன்னது என்ன?
மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, தெற்கு ரயில்வே காவல் கூடுதல் இயக்குனர் வனிதா விளக்கம் அளித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக ஏராளமான பயணிகள் சுற்றுலா ரயிலில் தமிழகம் வந்துள்ளனர். இந்த ரயில் நேற்று இரவு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி, ரயில் பெட்டியை பூட்டிக்கொண்டு சமைத்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினார். இதேபோல் தென்னக ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி சோம்நாத் தலைமையிலான குழுவும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ரயில்வே போலீசார் சார்பில், தெற்கு ரயில்வே காவல் கூடுதல் இயக்குனர் வனிதா விபத்து குறித்து நேரில் விசாரணை நடத்தினார்.
விசாரணைக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஏ.டி.ஜி.பி. வனிதா, “ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்து சதி வேலைகளுக்கான சாத்தியம் ஏதும் இல்லை. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன் 7 பேரின் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டு, விமானம் மூலம் உ.பி. அனுப்பி வைக்கப்படும்” எனக் கூறினார்.
தீ விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu