ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு வந்தால் அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி

ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு வந்தால் அபராதம்: உயர் நீதிமன்றம் அதிரடி
X

உயர் நீதிமன்ற மதுரை கிளை. (கோப்பு படம்).

கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்தால் மனுதாரருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கோயில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஆடும் இளம் பெண்கள் ஆபாசமாக உடை அணிவதாகவும், மது அருந்திவிட்டு ஆடுவதாகவும் புகார் எழுந்தது. இதனால், ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு காவல் துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில், கரூர் அருகே கடவூர் சிந்தாமணிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார. அந்த மனுவில், கரூர், கடவூர் சிந்தாமணிப்பட்டி பகுதியில், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் திருவிழா 06.06.2023 முதல் 08.06.2023 வரை நடைபெறுகிறது .நிகழ்வின் போது, கரகம் பாவித்தல் மற்றும் ஆடல் நிகழ்வு நடைபெறுகிறது. எனவே, ஆடல் பாடல் நிகழ்வுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறி உள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த மனுதாருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது, நீதிபதிகள், ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவில், ஆடல் பாடல் நிகழ்வுக்கு அனுமதி கோரி பொது நல வழக்காக தாக்கல் செய்ய இயலாது என உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது. மனுதாரர் ஆடல் பாடலுக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளிக்க வேண்டும். மனு அளித்த 7 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்பட்டதா இல்லையா என தெரிவிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். ஆனாலும், மனுதாரர்கள் இந்த உத்தரவை பின்பற்றாமல், மீண்டும் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் பொது நல வழக்காக தாக்கல் செய்கின்றனர்.

எனவே, இனிமேல், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், பொதுநல மனு தாக்கல் செய்தால், அந்த மனுதாரருக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்த நீதிபதிகள், ஆடல் பாடல் அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags

Next Story