மதுரையில் லஞ்சம் கொடுக்க முயன்றவர்களை கைது செய்த சிபிஐ அதிகாரிகள்
மதுரையில் லஞ்சம் கொடுக்க முயன்றவர்கள் மற்றும் பெற முயன்ற பொறியாளர் உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மதுரையில் உள்ள மத்திய பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நிர்வாக பொறியாளராக பணியாற்றி வந்த பாஸ்கர் என்பவர் மீது பல்வேறு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அவருடைய செல்போனுக்கு வரும் அழைப்புகள் அனைத்தையும் சி.பி.ஐ. போலீசார் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் அவரது செல்போன் உரையாடலின் போது மத்திய பொதுப்பணித்துறை ஒப்பந்த பணிகளை எடுத்து நடத்தி வந்த ஒப்பந்தகாரர்களான சிவசங்கர்ராஜா, நாராயணன் ஆகிய இருவரும் தங்களுக்கு சேர வேண்டிய பணிக்கான தொகையை உடனடியாக வழங்கும்படி கேட்டதற்கு, தனக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாக தர வேண்டும் கேட்டுள்ளார். மேலும் தனக்கு தர வேண்டிய லஞ்ச பணத்தினை வீட்டிற்கு வந்து கொடுக்குமாறும் கூறியுள்ளார்.
இவர்களின் உரையாடலை சி.பி.ஐ. போலீசார் பதிவு செய்து கொண்டனர். இதனையடுத்து போனில் ஒத்துக்கொண்ட படி மதுரை மீனாம்பாள்புரம் பகுதியில் உள்ள குடியிருப்பில் பாஸ்கரின் வீட்டுக்கு ஒப்பந்தகாரர்களான சிவசங்கர் ராஜா மற்றும் சென்னையை சேர்ந்த நாராயணன் ஆகிய இருவரும் லஞ்சப்பணத்தை கொண்டுவந்துள்ளனர்.
இதனையடுத்து கொண்டுவந்த லஞ்ச பணத்தை கட்டுகட்டாக நிர்வாக பொறியாளர் பாஸ்கர் வாங்கும்போது அங்கு மறைந்திருந்து கண்காணித்த சி.பி.ஐ. போலீசார் நிர்வாக பொறியாளர் பாஸ்கரன் மற்றும் அவரிடம் லஞ்சம் கொடுத்த ஒப்பந்தகாரர் சிவசங்கர் ராஜா மற்றும் நாரயணன் ஆகிய 3 பேரையும் கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.
பின்னர் அவர்கள் 3 பேரையும் மதுரையில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் -வழக்கை விசாரித்து மூவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி எம்.சிவபிரகாசம் உத்தரவிட்டார்.
மதுரையில் லஞ்சம் பெற முயன்ற மத்திய பொதுப்பணித்துறை மண்டல நிர்வாக பொறியாளர் மற்றும் லஞ்சம் கொடுக்க முயன்ற இருவரையும் சேர்த்து சிபிஐ போலிசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu