மதுரை மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி கூடத்தை பார்வையிட்ட கனிமொழி எம்.பி.
மதுரை விளாச்சேரியில் உள்ள மண்பாண்ட பொருட்கள் உற்பத்திக் கூடத்தை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் பார்வையிட்டார்.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரி பகுதி மண்பாண்டப் பொருட்களுக்கு மிகவும் புகழ் பெற்றது ஆகும். இங்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட மண்பாண்ட கைவினைஞர்களின் குடும்பங்கள் உள்ளன. இங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த களிமண்ணில் மண்பாண்டப் பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் களிமண் மூலம் உற்பத்தி செய்யப்படும் கஞ்சிக்கலயம் முதல் கலைநயமிக்க சுவாமி சிலைகள் கைகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. கலைநயம் மிக்க இந்த மண்பாண்ட பொருள்கள் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை சார் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் இன்று மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, விளாச்சேரி ஊராட்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி மற்றும் நிலைக்குழுவின் உறுப்பினர்கள் சென்றனர்.
அந்தப் பகுதியில் உள்ள மண்பாண்டப் பொருட்கள் உற்பத்தி செய்யும் கூடத்தை அவர்கள் பார்வையிட்டனர். அந்தப் பகுதியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மண்பாண்டங்கள், களிமண் சிலைகள், பொம்மைகள், அகல்விளக்கு உள்ளிட்ட பாரம்பரிய கைவினைப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சுய உதவிக் குழுக்களையும் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் சந்தித்தனர்.
மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உள்ளிட்டவைகள் குறித்து நிலைக்குழுவினர் கேட்டறிந்தனர். தொடர்ந்து, கைவினை கலைஞர்களின் கோரிக்கை மனுக்களைக் கனிமொழி எம்.பி பெற்றுக் கொண்டார். கோரிக்கை மனுக்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழி எம்.பி. கைவினை கலைஞர்களிடம் உறுதியளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu