அழகர்கோவில் கோட்டைச்சுவர் இடிப்பு: இந்து அமைப்புகள் எதிர்ப்பு
கள்ளழகர் கோவில் கோட்டை சுவர் புனரமைப்பு பணிகள்
மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் கோயில் கோட்டைச்சுவர்களை புனரமைக்கும் பணிக்காக இடிக்கும் பணி நடந்து வருகிறது. பழமை மாறாமல் புதுப்பிக்கும் தொழில்நுட்பங்கள் உள்ள நிலையில் இடிப்பதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கள்ளழகர் கோயிலின் அடையாளமான கோட்டைச் சுவரை புனரமைக்க ஹிந்து அறநிலையத்துறை நிதி ஒதுக்கியுள்ளது. பல இடங்களில் சுவர் சேதமடைந்து சாய்ந்து உள்ளது. இதனை அகற்றிவிட்டு பழமை மாறாமல் மீண்டும் அதே கற்களைக் கொண்டு கட்டுவதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
இது குறித்து கோயில் துணை ஆணையர் கூறியதாவது: வெளிப்புற கோட்டையான அழகாபுரி கோட்டை 4 ஆயிரம் மீட்டர் நீளமுடையது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக 2 ஆயிரம் மீட்டர் அளவுள்ள கோட்டைச் சுவர்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு பகுதிகளில் பாதிப்பணிகள் நிறைவுபெற்றுள்ளன. மேற்கு பகுதியில் அதிகம் சேதமடைந்து சாய்ந்துள்ள கோட்டைப்பகுதிகளை சரிசெய்யும் பணிக்காக ரூ. 2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட, மாநில தொல்லியல் துறை வல்லுநர்கள் குழு பரிந்துரைபடி 300 மீட்டரில் கோட்டை சுவர் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்றார்.
இந்து ஆலய பாதுகாப்புக்குழு மாநில செயலாளர் ஆதிசேஷன் கூறுகையில், பழமையான கோட்டைச்சுவர் கோயிலுக்கு மட்டுமல்ல, மதுரையின் அடையாளமாகவும் உள்ளது. புராதன சின்னமாக கருதப்படும் இக்கோட்டைச்சுவரை இடிக்காமல் புதுப்பிப்பதற்கான தொழில் நுட்ப வசதிகள் உள்ள நிலையில் இடிக்க வேண்டிய அவசியமில்லை. உடனடியாக இடிக்கும் பணியை நிறுத்த வேண்டும். மேலும் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பில் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu