உசிலம்பட்டியில் ஏலம் தொடர்பான வழக்கில் நிலுவை வழக்குடன் பட்டியலிட மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

High Court News in Tamil
X
உசிலம்பட்டி சந்தைக் கடைகள் தொடர்பாக ஏலம் குறித்த வழக்கில் இறுதி முடிவு உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த வீரமணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், உசிலம்பட்டி நகராட்சி நிதி சுமையில் உள்ளது. இதற்கான காரணத்தை அறிய முயன்றபோது உசிலம்பட்டி பஞ்சாயத்து யூனியனிலிருந்து, உசிலம்பட்டி நகராட்சிக்கு வழங்கப்பட வேண்டிய கடைகள் உள்ளிட்ட சொத்துகள் இன்னமும் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்திருந்தார். மேலும், இதுதொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மதுரை மாவட்ட பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குநர் அலுவலகம் சைக்கிள் ஸ்டாண்ட் மற்றும் காலி இடமான சந்தையை மட்டும் உசிலம்பட்டி நகராட்சி வசம் ஒப்படைக்கவும் திருமண மண்டபம் உள்ளிட்ட சிலவற்றை உசிலம்பட்டி பஞ்சாயத்து யூனியன் வசமே வைக்குமாறும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது சட்டவிரோதமானது. ஆகவே வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உசிலம்பட்டி யூனியன் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி சொத்துக்களை முறையாக கணக்கீடு செய்யவும், மதுரை மாவட்ட பஞ்சாயத்துக்களின் உதவி ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இதேபோல உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய கடைகளுக்கான ஏலம் நடத்த தடை விதிக்க கோரியும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விஜயகுமார், ஜெயச்சந்திரன் அமர்வு, இந்த வழக்குகளை ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் பட்டியலிடவும், உசிலம்பட்டி சந்தை கடைகள் தொடர்பான ஏலம் நடத்தப்பட்டால், இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்பிற்கு உள்பட்டது எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!