பேனா கேமரா மூலம் படம் பிடித்த வழக்கு: ஏடிஎஸ்பி விசாரணைக்கு மாற்றி உத்தரவு

பேனா கேமரா மூலம் படம் பிடித்த வழக்கு: ஏடிஎஸ்பி விசாரணைக்கு மாற்றி உத்தரவு
X

பைல் படம்

பேனா கேமரா மூலம் படம் பிடித்த வழக்கை ஏடிஎஸ்பி விசாரணைக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் கழிப்பறையில் பேனா கேமரா மூலம் படம் பிடித்த வழக்கை பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பி விசாரணைக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் கடந்த 2019ஆம் ஆண்டு உண்டியல் எண்ணும் பணி நடந்தது அப்போது பெண் ஊழியர்களுக்கான கழிப்பறையில் பேனா கேமரா மூலம் படம் பிடித்ததாக மதுரை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் மீது புகார் எழுந்தது. இச்சம்பவம் குறித்து சாப்டூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பச்சையப்பனை கைது செய்தனர் . அதன் பின்னர் பச்சையப்பன் இவ்வழக்கில் ஜாமீன் பெற்றார். இந்த வழக்கின் விசாரணை பேரையூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில் பெண் ஊழியர் ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: பெண்களுக்கான கழிப்பறையில் பேனா கேமரா வைத்து படம் பிடித்தது தொடர்பான வழக்கில் காவல்துறையினர் புகார்தாரர் இடம் வாக்குமூலம் பெறவில்லை. குற்றப் பத்திரிக்கையில் பல உண்மைகள் இல்லை. எனவே இந்த வழக்கை மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார் .

இந்த மனு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது . மனுவை விசாரித்த நீதிபதி பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் ஏடிஎஸ்பி இந்த வழக்கை விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags

Next Story