கடந்த 1972--ஆம் ஆண்டில் புழக்கத்தில் இருந்த 5 பைசாவுக்கு மதுரையில் பிரியாணி விற்பனை...!
மதுரை, செல்லூர் பகுதியில் 1972--ஆம் ஆண்டில் புழக்கத்தில் இருந்த 5 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்யப்படுவதாக வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்து நூற்றுக்கணக்கானோர் சமூக இடைவெளியை மறந்து திரண்டனர்.
மதுரை, செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில், தெற்குவாசல் சுகன்யா பிரியாணி என்று புதிதாக பிரியாணி கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. முன்னதாக பிரியாணி கடை சார்பாக,செல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை திறப்பு விழா குறித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அதில், கடந்த 1972-இல் புழக்கத்தில் இருந்த 5 பைசா நாணயத்தை கொண்டு வருபவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று திறப்பு விழா என்பதால், வீட்டிலிருந்த செல்லாத ஐந்து பைசா நாணயங்களை எடுத்துச்சென்று நூற்றுக்கணக்கானோர் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு அலை அலையாக அணி திரண்டனர்.
மதியவேளையில் 500-க்கும் மேற்பட்ட நபர்கள் 5 பைசா நாணயத்தை கையில் வைத்துக்கொண்டு பிரியாணி வாங்குவதற்கு சமூக இடைவெளி இன்றி முகக்கவசம் இல்லாமல் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கடை உரிமையாளர்கள் ஒரு கட்டத்தில் அலைமோதிய மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல், பிரியாணி கடையின் கதவுகளை மூட வேண்டிய நிலை உருவானது.. தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தினரை கலைந்து போகச்செய்தனர். பழைய செல்லாத ஐந்து பைசா செல்லாத நாணயத்தை கொடுத்தால், பிரியாணி என்றவுடன் கொரோனா நோய் தொற்றையும் மறந்து, பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி, குவிந்த சம்பவம் சுகாதாரத்துறையினரை கவலையுறச்செய்துள்ளது.
தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் இருக்கும்போது, கொரோனா 3-ஆவது அலையைச் சமாளிக்க பலவிதமாக மருத்துவ ஆலோசனைகளுடன் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவரும் வேளையில், சமூகப்பொறுப்பின்றி அரசின் உத்தரவுகளை புறந்தள்ளிவிட்டு, சுய விளம்பரத்துக்காக இது போன்ற விநோதமான அறிவிப்புகளை செய்து அரசின் நோக்கங்களை சிதைப்பவர்கள் மீது காவல்துறையும், சுகாதாரத்துறையும் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இனி எவரும், இது போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu