அதிமுக ஆட்சியில் பந்தாடப்பட்டேன் - சகாயம்
நேர்மையாக இருந்ததற்காகவே அதிமுக ஆட்சியில் பந்தாடப்பட்டேன் என சகாயம் ஐஏஎஸ் மதுரையில் கூறினார்.
சகாயம் அரசியல் பேரவை ஆதரவோடு தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சி மற்றும் வளமான தமிழகம் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்கள் 20 பேர் தமிழகம் முழுவதும் களமிறங்கியுள்ளனர். தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பாக மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் நாகஜோதியை ஆதரித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
முன்னதாக மதுரை கேகே நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இதே மதுரையில் கலெக்டராக தேர்தலின் போது பணி செய்தேன். தற்போது காலம் தலைகீழாக மாறியுள்ளது. மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் எங்கள் வேட்பாளர் நாகஜோதிக்கு ஆதரவு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறோம். அத்தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிடும் அமைச்சர் செல்லூர் ராஜு மீது திமுகவினர் வைத்த குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக அவர் மறுக்க வேண்டும் அல்லது இவர்கள் ஆதாரப்பூர்வமாக அதனை நிரூபிக்க வேண்டும். இவர்களுக்கு நற்சான்றிதழ் கொடுப்பதற்காக நான் வரவில்லை.
அதிமுக, திமுக இரண்டையும் சம அளவில் நாங்கள் எதிர்க்கிறோம். இன்னும் சொல்லப்போனால் அதிமுக ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நான் மிகவும் பந்தாடப்பட்டேன். கைத்தறி கூட்டுறவு துறையில் என்னை பணியமர்த்திய போது அந்த நிறுவனமே நட்டத்தில் இயங்கியது. ஓராண்டிற்குள் அதனை மீட்டு எடுத்து மிக லாபகரமான தொழிலாக மாற்றி அதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு லாப பங்கு வழங்கினேன். அரசியலில் இறங்க வேண்டும் என்பதெல்லாம் எனது நோக்கமாக இருந்ததில்லை. நடிகர் ரஜினிகாந்த் என்னை சந்திக்க விரும்பிய போது கூட நான் அதனை தவிர்த்துவிட்டேன். நாங்கள் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கையில் எங்களின் கொள்கை. தமிழக மக்கள் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu