பெயர் நீக்கத்தை எதிர்த்து தேர்தல் ஆணையம் வரை சென்று வாக்குரிமையை மீட்ட மதுரை வாக்காளர்
தேர்தல் ஆணையத்தில் புகாரளித்து தனது வாக்குரிமையை மீட்ட மதுரை வாக்காளர் மகபூப் ஜான்
மதுரை மேற்கு பொன்னரகம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் மகபூப்ஜான் (72). இவர் மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர், மதிமுக தொழிற்சங்க மாநில இணைப் பொதுச் செயலாராகவும், தமிழ்நாடு தோட்டத் தொழிலாளர் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் கடைசியாக நடந்த உள்ளாட்சி தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்து வந்துள்ளார்.
மதுரை மக்களவைத் தொகுதியின் வரைவு வாக்காளர் பட்டியல் ஜன.22-ல் வெளியிடப்பட்டது. அதில் மகபூப்ஜானின் பெயர் இருந்துள்ளது. ஏப்.5-ல் இறுதி வாக்காளர் பட்டியலில் மகபூப்ஜான் பெயர் நீக்கப்பட்டுள்ளது. மகபூப்ஜானுக்கு பூத் சிலிப் வழங்கவில்லை. அவரது வீட்டில் இறந்துபோன அவர் மனைவி பெயரிலும் பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. அப்போது தான் இறுதி வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கப்பட்ட விபரம் மகப்பூப் ஜானுக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் அதிகாரியான, மாவட்ட ஆட்சியரை போனில் தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவித்துள்ளார். ஆட்சியர் அதிகாரிகளிடம் கேட்குமாறு கூறியுள்ளார். அதிகாரிகளை சந்தித்தும் பலனில்லாத நிலையில், தமிழ்நாடு தேர்தல் ஆணையருக்கு புகார் அனுப்பினார். அங்கும் நிவராணம் கிடைக்கவில்லை.
தேர்தலுக்கு இரண்டு நாள் இருக்கும் போது தலைமை தேர்தல் ஆணையருக்கு மி்ன்னஞ்சல் அனுப்பினார். இப்புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்தலுக்கு முதல் நாள் ஏப்.18 அன்று தலைமை தேர்தல் ஆணையத்தில் இருந்து ஏப்.19-ல் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்குமாறு தகவல் வந்தது. இந்த தகவலின் அடிப்படையில் காலையில் வாக்குச்சாவடி சென்ற மகபூப்ஜானுக்கு தேர்தல் அலுவலர்கள் ராஜமரியாதை அளித்தனர். வாக்குரிமையை செலுத்திவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பினார் மகபூப்ஜான்.
இதுகுறித்து அவர் கூறுகையில், வாக்காளர் பட்டியலில் இருந்து என் பெயரை நீக்கக்கோரி நான் மனு அளிக்கவில்லை. என் பெயர் நீக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட என் தொலைபேசி எண்ணுக்கு எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை. இருப்பினும் என் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தியது. மதுரையில் ஆட்சியர் தலைமையில் யானைமலை உச்சியில் ஏறி நூறு சதவீத வாக்களிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. அப்படியிருக்கும் போது காரணம் இல்லாமல் வாக்காளர்களின் பெயரை நீக்கினால் நூறு சதவீத வாக்குப்பதிவு எப்படி சாத்தியமாகும்?
என் கோரிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வழக்கறிஞர்கள் ஹென்றி டிபேன், சத்தியமூர்த்தி ஆகியோர் உதவினர். இந்திய தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுத்து எனது வாக்குரிமையை மீ்ட்டு கொடுத்துள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu