மதுரைக்கு வருகிறது மெட்ரோ ரயில் திட்டம்... முதல்கட்டப் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு..

மதுரைக்கு வருகிறது மெட்ரோ ரயில் திட்டம்... முதல்கட்டப் பணிகள் விரைவில் தொடங்க வாய்ப்பு..
X

மதுரை சந்திப்பு ரயில் நிலைய அறிவிப்பு பலகை. (கோப்பு படம்).

சென்னைக்கு அடுத்தப்படியாக, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க சாத்தியக் கூறு அறிக்கை தயாராகி உள்ளது. முதல்கட்டமாக 29 கிலோ மீட்டருக்கு ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. குறிப்பாக, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன.

இந்த நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு நடவடிக்கைள் எடுக்கப்படும் என தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். மதுரை மாநகரில் மெட்ரே ரயில் சேவையை துவங்கும் திட்டத்துக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணி பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம் என்ற தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது.

அந்த நிறுவனத்தினர் மதுரையில் ஆய்வு மேற்கொண்டு சாத்தியக்கூறு அறிக்கை (Detailed Feasibility Report or DFR) தயார் செய்தனர். அந்த அறிக்கை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் வழங்கப்பட்டு ஆய்வு செய்துள்ளது. இந்த நிலையில் சாத்தியக்கூறு அறிக்கையை விரைவில் தமிழக அரசிடம் அவர்கள் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பலகட்ட ஆலோசனைகள் நடைபெற்ரு முடிந்துள்ள நிலையில், அந்த அறிக்கை இன்னும் சில நாட்களுக்குள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் நிலையில் அடுத்தகட்டப் பணிகள் துவங்கப்படும்.

அடுத்தக்கட்ட பணி என்பது விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report or DPR) தயாரிப்பாகும். இந்த அறிக்கையில் தான் திட்டம் பற்றிய முழுவிபரம் இடம்பெறும். திட்டத்துக்கான நிதி, மெட்ரோ ஸ்டேஷன்கள் எங்கு அமைப்பது? உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் உறுதி செய்யப்படும்.

தற்போதைய சாத்தியக்கூறு அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கும் நிலையில் அடுத்த 4 முதல் 5 மாதத்துக்குள் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறி உள்ளனர்.

மதுரை மெட்ரோ ரயிலுக்கான முதற்கட்ட திட்டம் (Phase-I) என்பது 29 கிலோமீட்டர் தொலைவுக்கு 17 மெட்ரோ ரயில் நிலையங்களுடன் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை ஒத்தக்கடை முதல் மாட்டுத்தாவனி, புதூர், திருமங்கலம் வரை மெட்ரோ பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மதுரையில் சில முக்கிய கோயில்கள் உள்ளதால், வைகை ஆறு மற்றும் மதுரை பெரியார் பஸ் நிலைய பகுதிகளில் சுரங்க பாதை அமைக்கும் முடிவும் உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார். தற்போதைய சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில் 29 கிலோமீட்டர் தொலைவிலான மெட்ரோ பாதையில் 17 ஸ்டேஷன்கள் அமைக்கப்பட உள்ளது.

அதில், ஒத்தக்கடை, மதுரை உயர் நீதிமன்றம், புதூர், சிம்மக்கல், மதுரை சந்திப்பு மெட்ரோ, பசுமலை, திருநகர், தோப்பூர், கப்பலூர், திருமங்கலம் ஆகிய 10 முக்கிய இடங்களில் மெட்ரோ ஸ்டேஷன்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிற ஸ்டேஷன்கள் எவை என்பது விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பின்போது முடிவு செய்யப்பட உள்ளது

முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணி முடிவடையும்போது 2 ஆம் கட்ட மெட்ரோ திட்டம் துவங்கப்படும். இந்த திட்டம் என்பது திருமங்கலம், மதுரை விமான நிலையம், தெற்கு வாசல் உள்ளிட்டவற்றை இணைப்பதோடு முதல்கட்ட மெட்ரோ ரயில் பாதையின் தொடர்ச்சியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!